ஆட்டிறைச்சி உற்பத்திக்கு புதிய தொழில் நுட்பம்: கால்நடை பல்கலை



""ஆட்டிறைச்சி மற்றும் பதப்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பங்களை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது,'' என, துணைவேந்தர் பிரபாகரன் கூறினார்.

ஆடுகள் உற்பத்தி குறித்த தேசிய கருத்தரங்கம்  துவங்கியது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ளாடுகள் இரு கன்றுகளும், செம்மறி ஆடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றெடுக்கும். இந்தியாவில் மேற்கு
வங்காளத்தை சேர்ந்த, "காரோல்' இன செம்மறி ஆடுகள், இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றின் மரபணுக்களை எடுத்து, இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் செம்மறி ஆடு ரகங்களை உற்பத்தி செய்ய, பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு, 4 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. காரோல் ரக செம்மறி ஆடுகளிலிருந்து மரபணுகளை கண்டறிந்து, அவற்றை ஆராய்ச்சி கூடத்தில் வளர்த்து, புதிய ரக ஆடுகளை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. "பியூசென்டிட்டி' என்ற மரபணு ஆராய்ச்சி மூலம், ஆஸ்திரேலியாவில் இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் புதிய ரக ஆடுகளை உருவாக்கியுள்ளனர்.

தமிழகத்தில், 79 லட்சம் செம்மறி ஆடுகளும், 92 லட்சம் வெள்ளாடுகளும் உள்ளன. உலகளவில், ஆண்டுக்கு, 137 லட்சம் டன் ஆட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு, 8 லட்சம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, 5 சதவீதம் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாம் உற்பத்தி செய்யப்படும் இறைச்சி பெரும்பாலும் உள்ளூர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க, ஆடுகளை பண்ணைகளில் வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் ஆடுகளை இறைச்சிக்காக இனவிருத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இறைச்சி உற்பத்தி மற்றும் பதப்படுத்த தேவையான தொழில் நுட்பங்களை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோவை : கோவை கால்நடை பயிற்சி மையத்தில், சுகாதாரமான இறைச்சி உற்பத்தி செய்தல்
மற்றும் இறைச்சி பொருட்கள் தயாரித்தல் எனும் தலைப்பில், திறன்சார்ந்த இலவச
பயிற்சி முகாம் நடக்கிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோரது பொருளாதார
முன்னேற்றத்துக்கு, சுகாதாரமான இறைச்சி உற்பத்தி செய்தல் மற்றும்
தயாரித்தல் குறித்த, திறன்சார்ந்த இலவச பயிற்சியளிக்கும் திட்டம்,
சரவணம்பட்டி கால்நடை மருத்துவப்பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக, கோவை கால்நடை பயிற்சி மையத்தில், சுகாதாரமான இறைச்சி
உற்பத்தி செய்தல் மற்றும் இறைச்சி பொருட்கள் தயாரித்தல் எனும்,
திறன்சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும் 20
பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து இரண்டு நாட்கள்
பயிற்சியளிக்கப்படும்.
இறைச்சி உணவு, இறைச்சியிலுள்ள ஊட்டச்சத்துகள், சில்லரை இறைச்சி விற்பனை
அங்காடி அமைத்தல், இறைச்சி கால்நடைகளை தேர்வு செய்தல், முன்னறுப்பு
பரிசோதனை, சுகாதாரமான ஆட்டிறைச்சி மற்றும் கோழியிறைச்சியை உற்பத்தி
செய்தல், பின் அறுப்பு பரிசோதனை, வெட்டிய கால்நடைகளின் உடல்களை பகிர்தல்,
இறைச்சியை பாதுகாக்கும் வழிமுறை, இறைச்சிக்கூட உபகரணங்கள், மதிப்பூட்டிய
இறைச்சி பொருட்கள் தயாரித்தல் (கட்லெட், ஊறுகாய், சூப், சில்லி, சிக்கன்
உட்பட மேலும் பல) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும், சிடி
பாடங்கள், நேரடி செயல்விளக்கங்களும் நடக்கின்றன.
பயிற்சியாளர்களுக்கு, இலவச டீ மற்றும் மதிய உணவு வழங்கப்படும்; இலவச
பயிற்சிக் கையேடும் வழங்கப்படும். ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக்குழு
உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோர், மையத்தை நேரிலோ, கடிதத்திலோ அல்லது
0422 2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரை பதிவு செய்து
பயன்பெறலாம்.
இத்தகவலை, கால்நடை பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments